எங்கே ஆரம்பிப்பது…
எங்கே ஆரம்பிப்பது…
பல பெண்கள் என் வாழ்க்கையில் வந்து போனதில் யாரைப்பற்றி சொல்லுவது… இன்று வரை இணையதளங்களின் ரகசிய பதில்களில்(Secure Password Answer) உலவி கொண்டிருக்கும் அவளை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.
அறியாமை என்ற வார்த்தை எவ்வளவு வலிமையானது என்பதே அறியாத வயது…
தெரிந்தது எல்லாம்… படிக்கவேண்டும் அப்பாவுக்காக… பத்தாம் வகுப்பில் 300யை தாண்டியது மதிப்பெண்… குடும்பமே சந்தோஷத்தில் திளைத்தது….நெருங்கிய சொந்தங்களில் யாருமே தொடாத மதிப்பெண் என்ற சந்தோசம்.
அப்பாவின் என்னை பற்றிய அண்ணா பொறியில் பல்கலைகழக மாணவன் கனவு வலுக்க தொடங்கியது…
ஒரு தோல்வியில் இருந்து வெற்றி பிறக்கும்…. ஆனால் எனக்கோ வெற்றியில் இருந்து தோல்வி ஆரம்பமானது…… இடமாற்றம் …. பெற்றோர்களின் அரவணைப்பில் இல்லாதது….நான் இழந்தது மொத்தமாய், ஐந்து வருடங்களை…. கஷ்டகாலங்கள்…போகட்டும்….

இந்தியாவையே தலை நிமிர்த்திய மென்பொருள் துறை… இளைஞர்களிடம் ஏற்படுத்திய தாக்கம்….மணிரத்தினத்தின் ரோஜா படம் கொடுத்த பிரம்மிப்பு…..என்னையும் கொண்டுபோய் நிறுத்தியது சென்னையின் A.V.M திரை அரங்கின் எதிரே…… Aptech computer education…..Vadapalani…..என்னும் தங்க எழுத்துகள் பளபளத்து கொண்டிருந்தது.
இயற்கையில் மிகவும் கூச்ச சுபாவம் எனக்கு… ஒரு வருடம் வீணாகபோகும் என்று என்னை ஆங்கில வழி கல்வியில் இருந்து தமிழ் வழி கல்வியில் சேர்த்துவிட்டார்… எனது அன்னை… அது ஒரு தனி கதை…. ஆங்கில பள்ளியில் ஒரே தமிழ் மாணவன்….தலையை சுற்றுகிறதா… அந்த நிகழ்வு என் வாழ்க்கையில் ஏற்படுத்திய அதிர்வுகளை இன்று வரை உணர்கிறேன்.
தமிழ் வழி கல்வியில் படித்ததை நான் இழிவாக எண்ணவில்லை ஆனால் நான் தேர்ந்தெடுத்த துறையில் நான் எதிர்கொண்ட சிக்கல்கள்… என்னை பல முறை தடுமாறவைத்தது… இதை ஏன் சொல்லுகிறேன் என்றால்… நான் நுழைந்த கணிபொறி மையத்தின் வரவேற்பு அறையிலேயே தட்டு தடுமாறி பேசிய ஆங்கிலம் அங்கிருந்த இரு பெண்களையும் இம்சித்துவிட்டது .அப்பாவிற்கு தெரியாமல் கல்வி உதவி நிதி தேர்வு(Scholarship Exam) எழுதி மொத்த கட்டணத்தில் அறுபது சதவிகிதம் போக நாற்பது சதவிகிதம் கட்டினால் போதும் என்றனர் அந்த பெண்கள் மேலும் இந்த தகவல் எனது இல்லத்திற்கும் அனுபபட்டிருப்பதாக சொல்லி மகிழ்ச்சி கடலில் தள்ளினார்கள்.
நான் சொன்னேனே ஐந்து வருட கஷ்டகாலம்…என் அப்பா என் மேல் முழுவதுமாக நம்பிக்கை இழந்திருந்த காலம்… அந்த சமயத்தில் தான் அந்த கடிதம் வந்தது துறைமுகத்தில் தரைதட்டி நின்றிந்த என் வாழ்கை கப்பலை திரைகடலோட வைத்த கடிதம்… என் அப்பாவின் முகத்தில் மகிழ்ச்சி. கல்விக்கு பணம் கட்ட என்றுமே கவலைபடாத குடும்பம் அதனால் பணத்தை பற்றி கல்வி இல்லை. எனது பதினோரம் வகுப்பு பாடப்புத்தகம், அடகு வைத்த என் அன்னையின் தாலியினால் வாங்கப்பட்டது. நான் எடுத்த மதிப்பெண்களில் தான் என் அப்பாவிற்கு மகிழ்ச்சி.
அதிகாலை மணி நான்கு இருக்கும் நான் எழுந்தபொழுது… ஆறுமணிக்கு நான் கணிபொறி மையத்தில் இருக்கவேண்டும்…எனக்கு அழகாக இருந்த ஒரு ஆடை அணிந்து பேருந்து வழிதடத்தில் காத்திருந்தேன் அந்த அதிகாலை பொழுதினில்… அது சென்னைக்கு அருகில் அமைந்த கிராமம்.. புகை கக்கி வந்து நின்ற பேருந்தில் இனிய காலை பொழுது பயணம் ஆரம்பம்… என் வாழ்க்கையின் திருப்புமுனை நாள்… முரட்டு சூரியனை இதமானவன் போல் காலநிலை அந்த நிமிடம் மனிதர்களை ஏமாற்றிகொண்டிருந்தது. வழி நெடுக பச்சை பசேல் என்றிருந்த வயல் வரப்புகள் மனதை ரம்மியபடுத்தின…
வகுப்பறையில் நுழையும்போதே… கண்கள் அலைபாய்ந்தன…மிக சரியாய் இரண்டு நிமிடங்களில் ஆசிரியர் நுழைந்தார்… இனிதே எனது கணிபொறி பாடம் ஆரம்பித்தது…

பல நண்பர்கள் பெண் நண்பிகளும் தான்…முதல் சில நாட்கள்…வழகமானதாகத்தான் இருந்தது…பாழக்கிய ஐந்து வருடங்கள் மனதை உறுத்திகொண்டிருந்ததால் மிக கடுமையாக படிக்க ஆரம்பித்தேன்..முயற்சிக்கு நல்ல பலன்… நன்கு படிக்கும் மாணவர்களில் நானும் ஒருவனானேன் ஆனால் மனதில் ஒரு பெண் மட்டும் இனம் தெரியாத தொல்லை கொடுத்தால்…
காலை பொழுதினில் வகுப்புக்கள் ஆரம்பிப்பதால் என் வகுப்பில் இருந்த அனைவரிடமும் ஒரு புத்துணர்ச்சி இருக்கும் அவளிடம் சற்று அதிகமாகவே… குளித்து சரியாய் காயாதா கூந்தலினால்..அவள் அணிதிருக்கும் மேல் சட்டையின் பின்னால்… மீதமிருக்கும் ஈரம் போடும் கோலங்கள்… ஒவ்வொரு காலைபொழுதும்… என்னை…வார்த்தைகளை இன்று வரை தேடிகொண்டிருக்கிறேன்… நான் ஒரு சராசரி…கவி அல்லவே…
ஒரு நாள் வந்தது…நான் கட்டிகொண்டிருந்த காதல்கோட்டை கதவு திறக்க… என்னவள் என்னிடம் பேசினால் முதல் வார்த்தை “கொஞ்சம் தள்ளி போங்க” வழி மறித்து நான் நின்றதை அப்போது தான் உணர்ந்தேன்.
ஒரு வாரம் அந்த சொற்களின் மயக்கத்தில் கழிந்தது. அங்கே சேர்ந்தவர்கள் பல வகை அதில் ஒரு நண்பன் மிக எளிதில் ஒட்டிகொண்டான் நானும் தான். நல்லவன் என்ன கொஞ்சம் முரட்டு சுபாவம் என் காதலை வேறு யாரிடம் சொல்ல அவன் தான் கிடைத்தான் பெரிய வரவேற்பு அவனிடம் காதல்கோட்டை வலுத்தது.
காலை 8:45 வடபழனி பேருந்து நிலையம் அவள் தினந்தோறும் வீட்டிற்கு செல்லும் பேருந்தை பிடிக்க அங்குதான் வருவாள். அவளை பார்க்க வந்து விட்டு பார்க்காதது போல் வேறு எங்கோ போவது போல் நான் போட்ட வேடம் சிவாஜி இருந்தால் பாரட்டி இருப்பார். அன்று அவளை காணோம் வகுப்புக்கு வந்தவள் பேருந்து நிலையத்துக்கு வரவில்லையே மனது கிடந்தது தவித்தது. வேறொரு வகுப்பில் படிக்கும் எங்களுக்கு முன்னால் சேர்ந்த மாணவனும்(சீனியர்) தினமும் என்னை போல் வர ஆரம்பித்தான். இதை போய் என் முரட்டு நண்பனிடம் சொல்ல கதை கெட்டது அவளை தவிர அனைவர்க்கும் தெரிந்ததுவிட்டது நான் அவளை காதலிப்பது. என் நண்பன் போய் அவனிடம் நான் காதலிப்பதாகவும் அதும் அவள் எங்கள் வகுப்பை சேர்ந்தவள் என்றும் சொல்லி சற்று மிரட்டியும் கூட அவனை ஒதுக்கிவிட்டான் பயன் அவன் முழு கணிபொறி மையத்திலும் பற்றவைத்துவிட்டான். ஒரு தலை காதல் இருதலைகொள்ளி எறும்பு ஆனது.
ஆறுமுகமும் (முரட்டு நண்பன் ) நானும் பேசிக்கொண்டிருந்த போது அவள் கடந்து சென்றால்…
“எங்க கிட்டலாம் பேச மாட்டடீங்களா” என்றானே பார்க்கலாம் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை ஆங்கிலத்தில் ஒரு பழமொழி “முதலில் ஏற்படுத்தும் நம்மை பற்றிய கருத்தே என்றும் நிலைத்திருக்கும்” (மொழிபெயர்ப்பு தவறோ.. First impression is the best impression) இவனது முரட்டு சுபாவம் நம்மை சிக்கலில் விட்டுவிட்டதே என்று யோசித்து கொண்டிருந்தேன் நடந்ததோ… வேறு…
அவள் சாதரணமாக பேச ஆரம்பித்துவிட்டால் எனக்கு உள்ளுக்குல் ஆனந்தம் ஆர்பரித்துக்கொண்டிருந்தது வெளிய காட்ட முடியவில்லை ஏற்கனவே என் காதலை பற்றி எல்லோரும் அறிந்திருந்ததால் ஒரு புன்சிரிப்போடு கடந்து சென்றார்கள். நட்புக்கு அடித்தளம் போட்ட என் நண்பனை மனதார வாழ்த்திக்கொண்டிருந்தேன் பரஸ்பர சந்திப்பாக ஊர், முகவரி எல்லாம் மாற்றி கொண்டு வகுப்புக்குள் நுழைந்தோம்.
மனதினில் மிக பெரிய போராட்டம் ஐந்து வருடத்தை வீணாக்கிவிட்டு இங்கு வந்து சேர்ந்துளோம் ஆனால் காதல் அது இதுவென்று மனது கிடந்தது அலை பாய்ந்ததும் என்ன செய்வதென்றே புரியவில்லை…
நட்போடு காதலையும் நான் வளர்த்து கொண்டிருந்தேன் ஆனால் எங்களை பார்ப்பவர்கள் நங்கள் இருவரும் காதலிப்பதாக கருத ஆரம்பித்துவிட்டனர்.
எப்பொழுதும் வகுப்பு முடித்தவுடன் என்னிடம் விடை பெற்றுவிட்டு தான் மற்றவர்களிடம் விடைபெற்று வீடு திரும்புவாள் இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் எந்த அளவிற்கு அவளின் நேசத்திற்கு உரியவனாகிருப்பேன் என்று அவள் மிகவும் இனியவள் எப்பொழுதுமே சிரித்த முகம்… வித விதமாய் அவள் தேர்ந்தெடுத்து அணியும் உடைகள்… இன்னும் எவ்வளவோ… என்னை இன்பத்திலே புரட்டி போட்ட காலங்கள்…இனிப்பை தடவிய நிமிடங்கள்…அன்று நான் என் நண்பனோடு பேசி கொண்டிருந்தேன் வேக வேகமாய் வந்தவள் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு என்னை கவனிக்காமல் சென்றுவிட்டால் நான் அழுகாத குறை அந்த வரவேற்பு அறை முழுக்க என் வகுப்பு தோழர்களும் தோழிகளும் தீவிரமாக எதை எதையோ பேசி கொண்டிருந்தார்கள். ஆனால் அனைவரின் பார்வையும் என்னுடிய முகஅசைவுகளில் தான்… ஒரு கணம் மனம் வெற்றிடமாக தெரிந்தது… எதையும் சிந்திக்கும் மனநிலை இல்லை.
வெறுமையான பார்வையில் என் நண்பனின் எதோ ஒரு உரையாடளுக்கு தலை அசைத்துக்கொண்டிருந்தேன் அவனுக்கும் தெரியும் என் மனம் அங்கு இல்லை என்று… . “டக் டக்” என்கின்ற மிக பலமான காலணி சத்தம் எல்லோரும் வாயிற்படியை நோக்க வைத்தது மூச்சிறைத்து நின்றால் அவள்… ஒன்றுக்கும் சற்று குறைவான நொடி தான்…
“பாய்(bye) சிவா” என்றவள் மின்னலாக மறைந்துவிட்டால்.. சிவா என் பெயர் அல்லவா … ஏன் திரும்ப வந்தால் இந்த சிறு விடயத்தை கூட என்னால் தாங்க முடியாது என்று நினைத்திருப்பாலோ.. மனது நெகிழ்ந்தது…வெறுமையில் இழந்த நொடிகள் மின்னலாய் அவள் தோன்றிய நொடிகளில் சமன் செய்யப்பட்டது. அவளுக்குள் காதல் இருந்ததோ இல்லையோ… யாரும் எதிர்பாராத இந்த நிகழ்வினால் எல்லோரும் ஒரு முடிவிற்கு வந்துவிட்டார்கள். அங்கு காதல் உறுதி செய்யப்பட்டது வாழ்த்துக்களிலும் பார்வைகளிலும்.
அன்று சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லை புதிய ஒலிநாடவை உரக்க வைத்து கேட்டே ஆகா வேண்டும் என்கின்ற வெறி… இந்த நேரம் பார்த்து மின்சாரம் இல்லை…சரி அப்படி இப்படி என்று அரைமணி நேரம் கழித்து மின்சாரம் வந்தது “மிஸ்டர் ரோமியோ” A.R. ரகுமான் இசையில் முழு சத்தத்துடன் வைப்பதற்காக எல்லா கதவு சன்னல்களையும் மூடிவிட்டு ஆரம்பிக்க பொத்தானை அழுத்தும் போது கதவை யாரோ தட்டும் சத்தம்… வெறுத்துபோய் கதவை திறந்தால் சொந்த ஊரிலிருந்து அப்பாவை பார்க்க சிலர் வந்துள்ளனர் வெறுப்பு மனதில் மட்டும் பாவம் அவர்களுக்கு என்ன வேலையோ…முடிந்த வரை சத்தத்தை குறைத்து கேட்க ஆரம்பிதேன்… ஒரு பெரிய பிரச்சனை A.R. ரகுமான் இசையில் முதல் முறை கேட்கும் பொழுது சுத்தமாய் பிடிக்காது… அதற்கு விதிவிலக்கு ரோஜா படம் மட்டுமே… நேற்று கேட்ட
விண்ணை தண்டி வருவாயா…வரை அப்படி தான்.. முதலில் கேட்கும் பொழுது அதிகபட்ச எதிர்பார்ப்பால் மனம் லயிக்காது…
“மெல்லிசையே” பாடலும் அப்படித்தான் முதலில் பிடிக்கவில்லை… ஆனால் எங்கோ இருந்த என்னவளை என்னருகில் கிடத்திய பாடல்… “எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன்… உயிர் சுமந்து தவித்திருந்தேன்…” காலங்கள் என் காதலை எங்கோ தூக்கி அடித்துவிட்டன… ஆனால் அந்த சுகமான நிமிடங்கள்…
மீண்டும் ஒரு அதிகாலை பயணம்…ஒரு புதிய நாள்… நல்ல நாளும் கூட இன்று அவள் பிறந்த நாள்… மாசி மாதத்தின் மூன்றாம் வாரம் பிறந்தவள் எனக்கு நான்கு நாட்கள் முன்னால பிறந்துவிட்டால்…வருடம் மட்டும் வேறு…பேருந்தில் வந்து கொண்டிருந்தபோதே பல கற்பனைகள்…என்ன உடையில் வருவாள்… எந்த கோவிலுக்கு போயிருப்பாள்…இன்று வருவாளா…மாட்டாளா… ஒரு விதமான படபடப்பு… நிமிடங்கள்…ஒரு வழியாய் கழிந்தது… நூலகத்தின் கதவோரம் போட்டிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தேன்… ஆர்வகோளாறில் வெகு சீக்கிரம் வந்துவிட்டேன். ஒரு மூடிய வகுப்பறையில் அதிகாலை தொடங்கும் வகுப்பு நடந்துகொண்டிருந்தது. நான் காத்துக்கொண்டிருந்தேன் அவளுக்காக நொடிகள் நிமிடங்களாகி நிமிடங்கள் மணித்துளிகளாய் கரைந்துகொண்டிருந்தது.
நேற்று நடந்த விடயங்களை மனது அசைபோட துவங்கியது உள்ளுக்குள் ஓடிய காதல் நிகழ்வுகள் அந்த அதிகாலையில் யாருமற்ற தனிமையில் ரம்மியமாக இருந்தது. நேற்று நடந்தது…இதுதான்… எங்கோ ஒரு மூலையில் அவ்வளவு எளிதாக பார்க்க முடியாத இடத்தில் அமர்ந்து கணிப்பொறியில் “C” மொழியில் ஒரு பாடத்தினை பழகிக்கொண்டிருந்தேன் ஆய்வு கூடத்தில். இதில் நண்பர்களுக்குள் போட்டி வேறு யார் முதலில் முடிப்பது என்று.. அன்று ஏனோ அவள் தாமதமாக வந்திருக்கிறாள் வந்தவள் என்னை காணத வெறுப்பில் கணிபொறி ஆய்வு கூடத்தின் வாசலில் நான் உள்ளே இருப்பது கூட தெரியாமல் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்திருக்கிறாள். பிறகு என்ன நினைத்தலோ ஆய்வு கூடத்தின் உள்ளே வந்தவள் சரியாக வேலை செய்யாத ஒரு கணிப்பொறியில் அமர்த்து எதோ செய்துகொண்டிருந்தால்… அந்த நிமிடம் தான் நான் அவளை பார்த்தேன் அன்று என்னவோ தெரியவில்லை ஆய்வு கூடம் நிரம்பி வழிந்தது மாணவ மாணவிகளால் . அவள் வெறுப்பின் உச்சியில் இருந்தது அவள் முகத்தில் கண்ணாடியாக பிரதிபலித்தது. நான் அவளை நோக்கி கையை நீட்டியது தான் தாமதம்… திரும்பி ஒரு முறை முறைத்தாள்…இதயம் வலித்தது…நொறுங்கிப்போனேன்…
என்னுடன் உட்கார்திருந்த மூன்று நண்பர்களை நகர சொல்லி அவளை நோக்கி வந்தேன்… அவளை நெருங்கி அவள் பெயரை சொல்லி அழைத்தேன்… தவறு என்னுடையது தான் அவள் இல்லாமல் நான் என்றுமே ஆய்வு கூடத்தில் நுழைந்தது இல்லை ஆனால் அன்று நண்பர்களுக்கிடையே நடந்த போட்டி என்னை இந்த நிலைமைக்கு தள்ளிவிட்டது. அவள் பேசவில்லை நான் அருகில் அமர்ந்தேன்…எப்பவும் அவள் அருகில் உட்காரும் போது இருப்பதை விட இன்று என் உணர்வுகள் மேலோங்க ஆரம்பித்துவிட்டது…அவளிடம் இருந்து வந்த வாசமா…இல்லை அவளை காயபடுத்திவிட்டோம் என்கின்ற குற்றஉணர்ச்சியா எதுவென்று புலப்படவில்லை.
கணிபொறியில் இணைத்துள்ள விசைப்பலகை ஒழுங்காக இணைக்கபடாமல் இருந்ததால் அது சரியாக வேலை செய்யவில்லை. அதை சரி செய்தேன் ஆனால் சரியாகவில்லை…கணிப்பொறியுடன் நான் போட்டுகொண்டிருக்கும் சண்டையை அவள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை…ஒரு வழியாய் அதை சரிசெய்து கொடுத்துவிட்டு “sorry” என்றேன்.. ஒரு பதிலும் இல்லை…
அவளுடைய கோபத்தில் எனக்கு இந்த பாடல் தான் நினைவுக்கு வந்தது “மன்னிக்கமாட்டாயா உன் மனமிரங்கி”… ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை… முதல் முதலாக என் மேல் கோபப்படுகிறாள்… கோபத்தில் அவள் முகத்தை பார்த்தபொழுது எனக்கு கோபம் வரவில்லை…எழுத்தில் கொண்டுவரமுடியவில்லை அந்த உணர்வுகளை… முயற்சிக்கிறேன்.
“உன் கோபத்தில் நான் சாந்த நிலவாகி போனேன்…
உன் மனச்சூடு தாங்காமல் முகிலாய் முகிழ்ந்தேன்…
இனியவளே!!! என் இயல்பை மாற்றிவிடாதே…
உன் சுவாசக்காற்றின் வாயுத்துகள்கள்..
என் விலாசம் தேடி வந்து இம்சிக்கின்றன “
இரண்டு நாட்கள் அப்படியே கழிந்தன…வெறுமையாய் இந்த சிறு விசயத்திற்கு ஏன் இவள் இப்படி இருக்கின்றால் என்று மனதினில் போராட்டம்….
அவளுக்கும் எனக்குமாக ஒரு தோழி இருந்தால் அவள் உடைத்தால் என் காதல் கனவை… அரசால் புரசலாக எல்லோருக்கும் தெரிந்த எனது காதல் எப்படியோ என் காதலியின் காதிற்கும் எட்டியுள்ளது. எத்தனையோ முரளி படம் பார்த்திருப்பீர்கள் என் நிலையும் அப்படி தான் இருந்தது அவளின் செய்கை எனக்கு சுத்தமாக புரியவில்லை…. பிடிக்கவில்லையா… பிடித்திருக்கிறாதா… ஒன்றும் புரியவில்லை கேட்கவும் தைரியம் இல்லை… முன் பனி கால மரம் போல என் மனம் மகிழ்ச்சியை உதிர்த்து கொண்டிருந்தது. எங்கும் வெறுமை சூழ்ந்து கால நிலையை கலங்கடித்தது இரவும் தெரியவில்லை… பகலும் தெரியவில்லை… மிக கொடுமையான நாட்கள்…

ஆர்பரித்த சிந்தனையில் கொடுமையான ஒரு பேருந்து பயணம் முடித்து வகுப்பு அறையில் நுழைந்தேன்…எல்லோரும் முகத்தில் புன்னகை தவழ பேசிக்கொண்டிருந்தனர்… நான் நுழைந்ததும் ஒரு சிறு அமைதி பின்பு திரும்பவும் பேச்சு தொடர்ந்தது சற்று நேரத்தில் அவள் நுழைந்தால் வகுப்பறையினில் திரும்பவும் ஒரு அமைதி… ஒரு சில நாட்களாகவே இப்படித்தான் நடக்கிறது… என் காதலுக்கு அவர்கள் செலுத்தும் மவுன அஞ்சலியாக அந்த ஒரு சில நொடி அமைதி எனக்குப்பட்டது.
“மச்சி இன்னைகாவது அவ கிட்ட பேசுடா” இந்த வார்த்தை, என் நண்பன் தினமும் உச்சரிக்கும் மந்திரம் ஆனது.
எங்கள் வகுப்பில் மீனா என்று ஒரு பெண் எங்களை விட சற்று வயதானவள் அதிகம் இல்லை ஒன்று அல்லது இரண்டு வருடம் மூப்பு எனக்கு அறிவுரை வழங்கினால் அதுமட்டும் இல்லை என்னை பற்றியும் என் காதலியிடம் பேசி இருக்கிறாள்.
“அவ அவளுடைய மாமாவை தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுற வீணா காதல் அது இதுன்னு காலத்தை கழிச்சிடாதே அவ்வளவு தான் நான் சொல்லுவேன் ” மீனாவின் வார்த்தைகள் என்னை கலங்கவைத்து
இன்று மீனாவின் பிறந்தநாள் எல்லோரையும் தன் வீட்டுக்கு அழைத்திருந்தால் வகுப்பு முடிந்து எல்லோரும் ஒன்றாக அவள் வீட்டுக்கு சென்றோம் என்னவள் மட்டும் அந்த கூட்டத்தில் இல்லை. என் முகம் தேக்கிவைத்திருந்த கவலையை பார்த்து என் நண்பன் உறுதி படுத்தி கொண்டான் என் காதலியின் வருகையை…

இன்று எப்படியும் பேசிவிடுவது என்ற முடிவில் இருந்தேன். எங்களை புன்சிரிப்போடு வரவேற்றாள் மீனா… அவள் வீடு சற்று விசாலமானதாய் இருந்தது அவள் மனதை போலவே… அக்காள் தங்கை இருவரும் பழரசம் கொண்டுவந்து கொடுத்தார்கள்…அதுவரை என் காதலி வரவில்லை.
நிமிடங்களை பேச்சுக்கள் அழித்துகொண்டிருந்தன… மலை முகடுகளில் இருந்து வெளிவரும் சூரிய வெளிச்சம் போல் கதவினை திறந்து அவள் வெளிவந்தால்…எங்கும் அமைதி…பார்வைக்குள் பல வார்த்தை பரிவர்த்தனைகள்…அவள் வேண்டும் என்றே முகத்தை கவலையாக வைத்திருந்தது போல் இருந்தது. யாரிடமும் சரியாக பேசவில்லை… அவளை சங்கடபடுத்த நான் விரும்பவில்லை அவளை நொடிக்கொருதரம் கண்களில் அணுகினாலும்…அவள் விலகினால்… மீனாவிடமும் அவள் தங்கையிடமும் நன்றி சொல்லி கிளம்பும்போது அவர்கள் இருவரும் எனக்காக வருத்தப்பட்டார்கள்
ஒரு சில நாட்கள் தான்…சிறிது சிறிதாக அவள் கணிபொறி மையத்திற்கு வருவது குறைந்தது…என்னை குற்ற உணர்ச்சியில் தள்ளியது..
ஒரு மிக பெரிய மன போராட்டம்…அவளை பற்றிய நினைவினால்… கொஞ்ச காலம் படிப்பில் கவனம் இல்லாமல் கழிந்தது…
மெய்யாக வந்தவள்
பொய்யாக போனால்…
ஒரு
பாதி பூவாக
மறு பாதி
முள்ளாக
என்
நினைவலைகளில்
வசிக்கின்றால்…
நெருங்கிய
சொந்தமெல்லாம்
என்
கவலை
அறியுமுன்னே…
கால வெள்ளத்தில்
கரைந்தேவிட்டால்…
கரையினில்
நின்று கொண்டு
நான்
மனம் கலங்கி
தவிக்கின்றேன்…
குடும்ப சூழ்நிலை அவளின் நினைப்பை சற்று குறைத்தது…மீண்டும் படிப்பில் கவனம் செலுத்தினேன்.
ஒரு வருடம் கலைந்தது…கரைந்தது…
எங்கள் கணிபொறி மையத்தின் அருகில் ஒரு தேநீர் கடை இருந்தது, அது தான் அனைத்து நண்பர்களும் கூடும் இடம்… நாங்கள் செல்லமாக அதற்கு வைத்த பெயர் “யு.ஸ்” முக்கால்வாசி கணிபொறி பயில்வரின் லட்சியமே அமெரிக்க போவதுதான் அப்போது, அதனால் அதற்கு முன்னோட்டமாக இந்த பெயர் வைத்தோம்.
நண்பர்களுடன் ஒரு நாள் அரட்டை அடித்து கொண்டிருக்கும் பொழுது சூர்யா மருத்துவமனை பக்கமாக ஒரு உருவம் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது…உருவம் நன்கு தெரியும் பொழுது…உடம்பு நடுங்கியதே பாருங்கள்…அப்படி ஒரு நடுக்கம்…ரத்த ஓட்டம் அதிகமாகி இதயம் படபடத்தது….
அவள் தான்…ஒரு வருடம் கழிந்தும் மனதில் அழியாத அவள் உருவம்… அதே அழகு முகம்…சிரித்த முகம்…
என்னை கண்டும் காணமல் போய்விடுவாள் என்று நினைத்தேன்…அப்படி நடக்கவில்லை..