மனதை பாதித்த ஈழத்து கவிதை…
http://viduthalaivengaigal.blogspot.com/2010/03/blog-post_08.html

நேற்றைய அவளுடைய சாவு 
எனக்கு
வேதனையைத் தரவில்லை
மரத்துப் போய்விட்ட 
உணர்வுகளுக்குள்
அதிர்ந்துப் போதல் 
எப்படி நிகழும்?

அன்பான என் தமிழச்சிகளே,
இத்தீவின் சமாதானத்திற்காய்
நீங்கள் என்ன செய்தீர்கள்!?
ஆகவே, வாருங்கள்
உடைகளை கழற்றி
உங்களை 
நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்.

என் அம்மாவே 
உன்னையும் தான்!
சமாதானத்திற்காய் போரிடும்?
புத்தரின் வழிவந்தவர்களுக்காய்
உங்கள்
யோனிகளைத் திறவுங்கள்…

பாவம்,
அவர்களின் வக்கீரங்களை
எங்கு கொட்டுதல் இயலும்?
வீரர்களே வாருங்கள்
உங்கள் வக்கிரங்களைத்
தீர்த்துக் கொள்ளுங்கள்.

என் பின்னால்
என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.
தீர்ந்ததா நின்று விடாதீர்!
எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்.

ஆகவே,
வெடி வைத்தே சிதறடியுங்கள்
ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி,
அள்ளிப் புதையுங்கள்.
இனிமேல் எம்மினம்
தளிர் விடமுடியாதபடி.

சிங்களச் சகோதரிகளே!
உங்கள் யோனிகளுக்கு 
இப்போது தேவையில்லை.