சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள் இருவரும்,  நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தது. அவன் அவள் கையை இறுக பிடித்தான். அவள் ஏதோ உணர்ந்ததுபோல் தலையை ஆட்டினால் மனது ஒருமித்தது, ஒரு கண நொடி தான், இரு உடல்களும் தூக்கி எறியப்பட்டது. இருவரின் சிதைந்த உடல்களும் உறவினர் மத்தியில் கிடத்தப்பட்டிருந்தது.


நிலவனுக்கு பிரபாவை வெகு நாளாக தெரியும், அவர்கள் அலுவலகத்தில் அவளை போல் அமைதியான பெண் யாரும் இல்லை, அவளிடம் தன் இரண்டு வருட காதலை ஒரு வழியாக சொல்லிவிட்டான். இரண்டு வாரம் கழித்தே அவளிடம் இருந்து பதில் வந்தது.


“மரணம் மட்டுமே ஒன்று சேர்க்கும்” துண்டு காகிதத்தில் அவள் பதில்.


“நான் ஒரு அமைச்சர், உன் கல்யாணத்தை பத்தி நெறைய கனவு வச்சிருக்கேன் கலைக்கணும்னு நினைச்ச உயிரோட இருக்கமாட்ட ” ஜாதி வெறி பிடித்த அப்பாவின் வார்த்தைகள் அமிலங்களாக நுழைந்தன தாயில்லா பிள்ளை பிரபாவின் காதினில், செத்துப்போய் விடலாம் என்றிருந்தது அவளுக்கு.


நிலவன் கட்டிய தாலியை கண்களில் ஓத்திக்கொண்டால் பிரபா, முருகன் கோவிலை ஓட்டிய நெடுஞ்சாலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் தம்பதிகளை தட்டிச் சென்ற லாரியின் உள்ளே புகைபடத்தில் அமைச்சர் சிரித்துகொண்டிருந்தார்.


“ஐயா நம்ம லாரி தட்டி ஒரு ஜோடி இறந்துடுச்சு”


“அஞ்சோ பத்தோ கொடுத்து மேட்ற முடியா இதெலாம் என்கிட்ட சொல்லிக்கிட்டு ”  என்றவரின் செல்போன்  சிணுங்கியது. மகள் இறந்த போன துக்க செய்தி, சாதி வெறி பிடித்து உதிர்ந்த வார்த்தையை எண்ணி அவர் கண்கள் குளமாகின, சாதியத்தால் வார்த்தை விபத்தாகி, இருந்த ஒரு வாரிசும் இழந்து அனாதையானர்.

Tags: