சுந்தரத்தின் கையில் ஒரு நாவல்… வெகு நேரம் கீழே வைக்காமல் படித்துக்கொண்டிருந்தன்…கதை மாந்தர் அவன் மன உணர்ச்சிகளை மாறி மாறி ஆக்கிரமித்து கொண்டிருந்தனர்.  தொலைவில் அவன் அம்மா நூல் புடவையில் ஒட்டு தையல் போட்டு வறுமைக்கு விளம்பரம் செய்து கொண்டு இவனை நோக்கி வந்து கொண்டிருந்தால் காலம் தின்ற அவள் இளமை, வறுமை தின்ற அவள் பொறுமை காட்டு கத்தலாய் வெளிப்பட்டது அவன் நாவல் படித்துக்  கொண்டிருப்பதை பார்த்து. அவன் எப்போதுமே கவனமாக தான் இருப்பான் அம்மாவுக்கு தெரியாமல் நாவல் படிப்பதில். இன்று தான் கோட்டைவிட்டுவிட்டான்.  அடுத்த அரைமணி நேரம் அவன் வாங்காத திட்டு இல்லை…
 
“சுந்தரம், இந்த பணத்த கொண்டுபோய் கவி அம்மாகிட்ட கொடுத்துட்டு வாடா” என்றால் சுந்தரத்தின் தாய் திட்டி ஓய்ந்த களைப்பில்.
கிராமத்தின் கிழக்கு மூலையில் இருந்தது கவிதாவின் வீடு. சுந்தரத்திற்கு கவிதாவை ரொம்ப பிடிக்கும். இருவருமே சுஜாதாவின் தீவிர ரசிகர்கள். போட்டி போட்டு கொண்டு இருவரும் படிப்பார்கள்,ரசிப்பார்கள்,விவாதிப்பார்கள். அன்று அவள் ஏதோ   துவையல் அரைத்துக்  கொண்டிருந்தால், அம்மிக்கல்லில்.  கையால் தள்ளி அவள் துவையல் அரைக்கும் அழகை ரசித்து கொண்டே அவளை நெருங்கினான் சுந்தரம்.
“கவி வீட்ல அம்மா இல்லையா…” கவிதா அம்மிக்குளவியை சற்று நிறுத்தி இல்லை என்பது போல் தலையசைத்தால்.
“இந்தா  இதுல ஆயிரத்தி ஐநூறு ரூபா இருக்கு, அம்மா வந்தவுடனே கொடுத்திடு”  பையில் இருந்த பணத்தை எடுத்து நீட்டினான். வாங்கியவள் பணத்தை எண்ணாமல் பக்கத்தில் வைத்தால்.
“சரியா இருக்கானு பார் கவி”
“இது என்ன முத தடவயா.. பரவாயில்லை சுந்தரம்” என்றவள் அவனை பார்த்து புனைகைத்தாள்.
“கவி, உன்ன ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்கமாட்டியே” என்றவனை கேள்வியாக பார்த்தால்.
“என்னை உனக்கு எத்தனை வருசமா தெரியும், என்னைக்காவது உன் மேல கோபப்பட்டிருக்கேனா… ” என்று இழுத்தவள் “சும்மா சொல்லு சுந்தரம்” என்று முடித்தால்.
“அது இன்னைக்கு நடந்துற கூடாதுனு தான் யோசிக்கிறேன்” என்றவன் சிந்தனையில் விழுந்தான்… சற்று யோசித்தவன்…
” என் கூட வந்துடு கவி, எங்கயாச்சும் ஓடி போய்டலாம்,அந்த கிழவன் உனக்கு மாப்பிள்ளையா …வேணாம் கவி…”  சொல்லி முடிக்கவில்லை கவிதாவின் அம்மா பிரசன்னமானால்…
“சுந்தரமா, வாப்பா அம்மா காசு கொடுத்து அனுப்புச்சா” என்றவள் கவிதாவின் அருகில் இருந்த பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தால்.
“சரியா இருக்காம்மா” என்றவன் கவிதாவை பார்த்தான் அவள் எந்த சலனமும் இன்றி தன் வேலையில் ஆழ்ந்துவிட்டால்.
“சரியா இருக்குப்பா, உள்ள வா கொஞ்சம் டீ குடிச்சிட்டு போலாம்”    என்றவள் அவன் பதிலுக்கு காத்திராமல் உள்ளே செல்ல யத்தனித்தாள். ராக்கம்மா நல்லவள் தான் ஆனால் முன்கோபி சண்டை என்று வந்துவிட்டால் யார் என்று பார்க்கமாட்டால் அவ்வளவு தான் கிழி கிழி என்று கிழித்துவிடுவாள் அதனால்  முடிந்தவரை அவளை யாரும் நெருங்க மாட்டார்கள்.
“இல்லம்மா, இன்னொரு நாள் வரேன்”  கவலையை  பெருமூச்சாய் வெளியேற்றி அங்கிருந்து தப்பித்தான்.
கவிதாவை அந்த ஊர் மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். அமைதியானவள். அவள் அம்மாவை போல  அதிர்ந்து பேச மாட்டாள். அவள்  மேல் அந்த ஊர் காட்டும் அன்புக்கு  ,அவள் தந்தையை இழந்தவள் என்பதும் ஒரு காரணம். சுந்தரத்திற்கு அவள் மேல் காதல் இல்லை ஆனால் இதயத்தின் ஒரு ஓரத்தில் அவள் நினைவுகளை சேமித்துக்கொண்டிருகிறேன். அவளை ஒரு வயதானவருக்கு திருமணம் செய்ய அவள் அம்மா எடுத்த முடிவு… நடந்த நிச்சயம் அனைத்தும் அவனை தடுமாறவைத்தது. அளவுக்கு அதிகமாய் அவளை பற்றிய நினைவுகளால் நிம்மதியிழந்தான்.
“ஏய் சுந்தரம் நில்லுடா” அவன் நண்பன் ரவி
சுந்தரம் நிற்பதாக தெரியவில்லை சற்று ஓங்கி அழைத்தான். ஒரு வழியாய் அவன் நினைவுகள்  நிகழ்காலத்திற்கு தரையிறங்கியது. ரவியை பார்த்து தலையசைத்தான் அதற்குள் ரவி அவனை நெருங்கிவிட்டான்.
“டேய், என் நண்பன் சென்னைல இருந்து வந்திருக்கான்டா…அவனோட சொந்தக்காரர்  அலுவலகத்தில ஆளு வேணுமா உன் ஞாபகம் வந்துச்சு உன்னை பத்தி சொன்னேன்…உடனே வர சொல்லி இருக்காங்க, இந்தா  அவங்க விலாசம், தொலைபேசி எண்ணும் இருக்கு, போறதுக்கு முன்னாடி அவங்க கிட்ட பேசிடு ” என்றவன் ஒரு சிறு காகிதத்துண்டை அவனிடம் நீட்டினான். சுந்தரம் உணர்ந்து நன்றி தெரிவிக்கும் முன்னே நடையை கட்டிவிட்டான்.
சென்னையின் வெயில் சுந்தரத்தை பாடாய்படுத்தியது ஆனால் அலுவலகம் முழுதும் குளிர் சாதனம் பொருத்தப்பட்டு இருந்ததால் சமாதானப்படுதிக்கொண்டான். அவன் கிராமம் தமிழகத்தின் தென்கோடியில் இருந்தாலும் இந்த அளவு வெயில் அவன் அனுபவித்தது கிடையாது. அலுவலகத்தில் அறிமுக படலம் முடிந்து தனக்குரிய ஆசனத்தில் வந்து உட்கார்ந்தான். தன் தந்தை இறந்த பிறகு அம்மா பட்ட கஷ்ட நஷ்டங்கள் அவன் கண் முன் வந்து போனது கூடவே கவிதாவின் நினைவுகளும் கவலையை அப்பிப்போனது. ஒரு வாரம் அப்படி இப்படி என்று கழிந்தது. முதல் வாரம் என்பதால் வேலையும்  அதிகம் இல்லை.
“அம்மா, நல்லா இருக்கியா” புதிதாய் வாங்கிய கைபேசியில் இருந்து முதல் தொடர்பு.
“நல்ல இருக்கேன் சுந்தரம்,  நீ எப்படிப்பா இருக்க” குரலில் தடுமாற்றம் தெரிந்தது.
“நல்ல இருக்கேன்மா, ஏன்மா  என்னமோ போல பேசுற உடம்பு சரியில்லையா” வார்த்தையில் பரிதாபம் கூடி இருந்தது. “இனி எதுக்கும் கவலைப்படாதேமா, நான் இருக்கேன்” சொல்லி முடிக்கவில்லை அவன் அம்மா உள்ளம் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டால். இவன் எவ்வளவோ முயன்றும் அவள் நிறுத்துவதாய் தெரியவில்லை.
“ஏன்மா என்ன ஆச்சு, சொல்லிட்டு அழு” சற்று சத்தமாய் சொல்லவே உடைந்த குரலில் பேச ஆரம்பித்தால்.
“ராக்கம்மா நம்ம வீட்டுக்கு வந்து சத்தம் போட்டா சுந்தரம், நேத்துல இருந்து கவிய காணல,  ஊரே அமளிய இருக்கு. அந்த பொண்ணு உன் கிட்ட தான் அதிகமா பேசுனு ஊரே உன்னை சந்தேகப்படுதுப்பா”
விசயத்தின் சூடு காது வழியே இதயத்தில் பரவியது,

“என்னமா சொல்லற, கவிய காணோமா” என்றவன் சிந்தனையில் இருந்து விடுபடுவதற்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

மீண்டும் பல முறை தொடர்பு கொண்டான் ஆனால் பயனில்லை. என்ன செய்வதென்றே புரியவில்லை. வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, விடுப்பு கேட்கலாம் என்றால்…என்னவாகிருக்கும்…எங்கு சென்றிருப்பால்…எண்ணங்கள் சுழன்று அடித்தன அவனுக்கு. அந்த நேரம் பார்த்து அவன் மேலாளர் அந்த பக்கம் வந்தார் இவன் முகத்தை பார்த்ததுமே அவருக்கு ஏதோ உணர்த்திருக்கும் போல..
“என்ன ஆச்சு சுந்தரம், உடம்பு சரியில்லையா” என்றவர் அவனை நெருங்கி வந்து அமர்ந்தார்.
“இல்ல சார், நல்ல தான் இருக்கேன்” என்றவன்
“சார் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு போலாம்னு இருக்கேன், போகட்டுமா” என்றான் கம்மிய குரலில். அந்த நேரம் பார்த்து அலுவலக உதவியாளன் அவர்களை நோக்கி வந்தான்.
“சுந்தரம் சார், உங்கள பாக்க ஒருத்தர் வந்திருக்கார், வந்துடுங்க” என்றவன் நான்கு இருக்கை தள்ளி அமர்ந்திருந்த நபரை நோக்கி சென்றான்.  இப்படி தான் நேற்று மூன்றாவது தளத்தில் உள்ள சுந்தரத்திற்கு பதிலாக இவனிடம் வந்து சொல்ல இவன் சென்று பார்த்தபோது தான் தெரிந்தது இவனை பார்க்க அந்த நபர் வரவில்லை என்கின்ற  விஷயம்… பத்து நிமிடம் வீணாய் போனது தான் மிச்சம். உதவியாளன் வேகமாய் நகர்ந்து போய்விட்டதால் வேறு வழி இல்லாமல் மேலாளரிடம் ஒரு மன்னிப்பை கொடுத்துவிட்டு வரவேற்பறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அங்கே பார்த்தால்…

புதுமணத்தம்பதிகளாய் ரவியும் கவியும்…கவியின் கழுத்தில் புதிதாய் கட்டிய தாலி பளபளத்துக் கொண்டிருந்தது. சிந்தனை புயலில் சிக்கி சின்னாபின்னம் ஆனவன் தன் நிலை வர சில நொடிகள் பிடித்தது.

வேகவேகமாய் உணர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவந்தவன் “வாழ்த்துக்கள் ரவி” என்று புன்னகை ஒட்டிய முகத்தோடு கவிதாவை பார்த்தான்.

“போன நாச்சியம்மன் திருவிழாவில் இருந்து கவியும் நானும் காதலிக்கிறோம், சுந்தரம்…என் அப்பா மேல இருந்த பயத்தால உங்கிட்ட கூட சொல்லல எங்களுக்கு வேற வழி தெரியல…கொஞ்சம் கூட யோசிக்க நேரம் கொடுக்காம எல்லா காரியமும் நடந்துடுச்சு” என்றவன் ஆதரவாக சுந்தரத்தின் கைகளை பிடித்தான். “உனக்கே தெரியும் எங்க குடும்பத்தை பத்தி என் அப்பாவ சமாளிக்காம நான் கல்யாணம் பண்ண முடியாத நிலைமை, வேறு வழி தெரியலடா..உன்ன தான் மலையா நம்பி வந்திருக்கேன்” என்று புதிர் முடிச்சு போட்டான் வார்த்தைகளில்.

அவர் போற்றும் சாதியை விட்டு பார்த்தால் ரவியின் அப்பா மிகவும் நல்லவர். அந்த பகுதியில் அரசியல் செல்வாக்கு பெற்றவர் ஆனால் அதையும் தாண்டி சாதி சங்கத்தில் கிடைக்கும் பதவிக்கு புளகாங்கிதம் அடைபவர் தாழ்ந்த சாதி பெண்ணை கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமட்டார். இதுவெல்லாம் சுந்தரத்திற்கு நன்றாக தெரியும் ஆனால் ரவி எதிர்பாக்கும் உதவி என்னவென்பதே இப்போதைய நெருடல்…அவன் உணர்ச்சி கடலில் ஒரு புயல் ஓயும் முன்னே அடுத்த புயல் வீச ஆரம்பித்தது.

“என்னனு சொல்லு ரவி, முடிந்ததை கண்டிப்பா செய்றேன்” அவன் ஆதரவை வார்தையினில் கட்டினான். கவியின் பார்வையிலோ, உடல் மொழியிலேயோ  சுந்தரத்தினால் எதையும் அறியமுடியவில்லை அமைதியான கடல் போல் அவர்களின் பேச்சைக்  கேட்டுக் கொண்டிருந்தாள்.

“கொஞ்ச நாள் கவிய உன் கூட வச்சிக்க முடியுமா, அதுக்குள்ள நான் ஊருக்கு போய் எல்லாரையும் சமாதானப்படுத்திட்டு வந்து கூட்டிட்டு போறேன். என் அப்பா அவல பார்த்தா கண்டிப்பா கொலயே பண்ணிடுவார், தயவு செஞ்சு மாட்டேனு சொல்லிடாதே” என்றவன் கரங்கள் சுந்தரத்தின் கையை அழுத்தியது.

ஒரு வாரம் கழிந்தது…

கைபேசியின் மணி அடித்தது..மறு முனையில் சுந்தரத்தின் அம்மா “சுந்தரம், நல்ல இருக்கியாப்பா” குரலில் அதிக சோர்வு தெரிந்தது.

“நல்ல இருக்கேன்மா,என்ன ஆச்சுமா, ரவி கிட்ட இருந்து எந்த பதிலும் வரல” கேள்வியில் கவிதாவின் சோகம் கலந்திருந்தது அவளும் ஆர்வத்துடன் இவர்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்தாள்.

“சுந்தரம்…சொல்றேனு தப்பா எடுதுக்காத , அந்த பொண்ணை இனியும் நீ வச்சு இருக்குறது சரியா வராதுப்பா, ரவிக்கு அவங்க அப்பா வலுக்கட்டாயமா அவங்க மாமன் பொண்ண கட்டிவச்சிட்டாரு, ஊருக்கே விஷயம் இப்ப தான் தெரியும் யார்க்கும் என்ன நடக்குதுன்னு தெரியலப்பா, இதுக்கு நடுவுல போலீஸ் வந்து உன் விலாசம் வாங்கிட்டு போனங்கப்பா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு ” என்றவளின் உடல் நடுக்கம் குரலில் தெரிந்தது.

எல்லா நம்பிக்கையும் இழந்த மரணதண்டனை கைதியாய் சுந்தரத்தின் மனம் அந்த நிமிடம் இருந்தது.

இவள் என் வாழ்கை பாதையில் பல ஆண்டுகள் கூட வந்தவள், இந்த நிமிடம் வரை வாழ்க்கையின் துன்பங்களை மட்டும் சுமந்து கொண்டு எந்த சலனமும் இன்றி நிர்கதியாய் என் முன்னே நின்று கொண்டிருக்கிறாள், இவள் வாழ்கை எந்த வகையிலும் வீணாகப்  போகக்  கூடாது என்று ஒரு முடிவுக்கு வந்தவனாக அவளை அழைத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு பயணித்தான். பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அவள் கேள்விக்  குறியாய் அமர்திருந்தால், சிந்தனையின் ஓட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னால் அவன் காதலை ஏற்றுக்கொள்ள முடியாததற்கு அவள் சொல்லிய காரணங்களும் அவள் சிந்திய கண்ணீர் துளிகளும் அவனை உணர்ச்சிவசப்பட வைத்தது. காதல் சுமையை சுமந்து கொண்டு தன் சொந்த ஊரில் இருந்து கிளம்பியவன், காதல் தோழமையில் கரைந்து போக தன் நீண்ட கால  தோழிக்காக அவளின் நல்வாழ்கை ஒன்றே குறியாய் தன் மண்ணில் கால் வைத்தான். அவள் கூனிக்  குறுகி உயிரோடு உடலையும் அவன் பின்னே மறைக்க யத்தனித்தாள், அவன், அவள் கரம் பற்றி முகம் நிமிர்த்தி பள்ளி சிறுவன் போல் அவளை பிடித்து கொண்டு ரவியின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.