தாயே…
என்
வயிற்றுப் பசியை
உன் 
உடலை விற்றுப் 
போக்கினாய்…
நான்
என்ன பாவம்
செய்தேன்…
தினம் தினம்
பூக்கும்
இரவுகளில்
நான் சருகாய்
உதிர்ந்து கொண்டிருக்கிறேன்
மற்றவர்களின்
உடல் பசிக்கு…
யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்
இது
சான்றோன் மொழி…
நீ
பட்ட துன்பத்தை
எனக்கல்லவா…
பரிசளித்து விட்டாய்…
காம மிருகங்களின்
நகம் பட்ட காயங்கள் …
நெருக்கி இம்சித்தவனின்
பிடிக்காத முத்தங்கள்…
மெல்லிய பெண்மையினை
வாட்டிவதைத்த நிமிடங்கள்…
என் வாழ்வை
தொலைத்தவளே…
இது தானா 
உன் ஆசை…
நித்தமும்
ஒரு
காதல் கதை
என்
செவி வழியே
வழுக்கிச்  செல்லும்…
அதை
ஒரு நாளும்
உணராவண்ணம்
ஏன் தாயே…
இப்படி செய்தாய்…
முழு இரவு
விழித்திருந்து
பலர் காமம்
தீர்க்கின்றேன்…
எனக்கென்று
ஒர்
இரவு
ஒர் நாளும்
வாராதோ…
கல்லறை நோக்கி
எந்தன்
இரு விழியும்
தவிக்குதம்மா…
நேற்றொருவன் 
நெருக்கத்திலே
“தேவிடியா” என்று சொன்னான்..
அதற்கு முன்பு 
இன்னோருத்தன்
“என் கண்மணியே” என்று சொன்னான்…
நான்
உடல் விற்றேன்
என் உயிர்
பசி மறக்க.. 
அவன்
வார்த்தை விற்றான்
தன் காமப்
பசி போக்க…
அர்த்தமற்ற வார்த்தைகளை
தினமும் 
நான் அள்ளுகிறேன்…
என் 
படுக்கையறை நாற்றத்திலே…