SL_India flags_CI

இந்த கட்டுரை புதிய பரிமாணத்தை கொடுக்கிறது… என் ஆவேசத்தை குறைத்தது…உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்…
நன்றி – http://inioru.com/?p=14326

———————–

இந்தியா பற்றிய நமது உரைகல் என்ன ?: யதீந்திரா

இவ்வாறானதொரு தலைப்பில் ஏலவே திரு.டி.பி.சிவராம் (தராக்கி) ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். ஆனால் அந்த கட்டுரை முன்னிறுத்திய விடயங்களும் இந்த கட்டுரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முயலும் விடயங்களும் முற்றிலும் வேறானது.
விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் இந்தியா குறித்த உரையாடல்கள் நமது ஆய்வுச் சூழலில் மேலோங்கிக் கானப்படுகின்றன. இவ்வாறு இந்தியா குறித்த உரையாடல்கள் கூடுதல் கவனம் பெற்றதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று புலிகளின் வீழ்சிக்கு பின்னர் தமக்கானதொரு சுயாதீன முகத்தை காட்ட முயன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா குறித்து தெரிவித்து வந்த கருத்துக்கள் மற்றையது, தமிழரின் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கில் இந்தியா தனது செல்வாக்கை கூட்டும் நோக்கில் முனைப்புக் காட்டி வருவது.
இந்தியா குறித்து நமது அரசியல் சூழலில் இடம்பெறும் உரையாடல்கள் மற்றும் எழுத்துக்களை நாம் இரு வகையில் சுருக்க முடியும். ஒன்று, இந்தியாவை நமது அரசியலுக்கு ஆதரவான சக்தியாக கணிக்க முயலும் அவதானங்கள் மற்றையது இந்தியாவை முழுமையாகவே ஒரு எதிர்நிலை சக்தியாக கருதும் எழுத்துக்கள். இவ்வாறான எழுத்துக்கள் முற்றிலும் இந்திய எதிர்ப்பரசியல் பண்பு கொண்டவை. ஆனால் இதிலுள்ள சுவாரசியமான உட்கூறு என்னவென்றால், நமது தமிழ்ச் சூழலில் இந்தியாவை முழுமையாக எதிர்ப்போரும், இந்தியா என்பது ஈழத் தமிழர் அரசியலில் தவிர்த்துச் செல்லக் கூடிய ஒரு சக்தியல்ல என்பதை விரும்பியோ விருப்பாமலோ ஏற்றுக் கொண்டுவிடுகின்றனர். இதன் வெளிப்பாடுதான் அவ்வாறானவர்கள் அவ்வப்போது இந்தியாவை எதிர்ப்பரசியல் கண்ணோட்டத்தில் விமச்சித்து வருவதன் காரணமாகும்.  இந்த விடயத்தையே இந்த கட்டுரை தனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறது.
புலிகள் பலமாக இருந்த காலத்தில் இந்தியா குறித்து தமிழ்த் தேசியர்கள் மத்தியில் மிகவும் மேலோட்டமான பார்வையே இருந்தது, அதற்கும் மேலாக இந்தியாவை எதிர்த்தல் என்பதே ஒரு வகையான பெருமித அரசியலாகவும் கருதப்பட்டது. உலகின் நான்காவது வல்லரசையே நம்மட அமைப்பு தோற்கடித்தது என்றவாறானதொரு அசட்டுத்தனத்தின் வெளிப்பாடுதான் இந்த பெருமித அரசியல். 1962இல் இடம்பெற்ற சீன-இந்திய எல்லைப்புற யுத்தத்தின் பின்னர் மிக அதிகளவான இந்திய படையினர் யுத்தத்தில் கொல்லப்பட்ட சம்பவமாக புலிகள்-அமைதிப்படை யுத்தம் குறிப்பிடப்படுவது உண்மைதான். இதனை பல இந்திய ஊடகங்களும் அப்போது சுட்டிக்காட்டிருந்தன. இந்திய-புலிகள் மோதல் காலத்தில் இந்தியப் படைகளால் புலிகளை சரணடையச் செய்யவோ அல்லது முழுமையாக செயலிழக்கச் செய்யவோ முடியவில்லை என்பதும் உண்மையே ஆனால் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் முடக்க முடிந்தது. இந்த பின்புலத்தில்தான் இந்தியப்படைகளை இலங்கையிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்பதில் தீவிர முனைப்புக் காட்டிய பிரமேதாசவுடன் புலிகள் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டனர். புலிகளைப் பொருத்தவரையில் எப்படியாவது இந்தியாவை அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்ற தேவை இருந்தது. ஏனென்றால் இது புலிகளின் இருப்போடு ( (Existing) ) தொடர்புபட்டிருந்தது. இங்கு புலிகள் என்பது அதன் தலைவர் பிரபாகரனையே குறித்து நிற்கிறது. இதன் தொடர்சியாகத்தான் ராஜீவ் காந்தியின் கொலை இடம்பெறுகிறது. இதற்கு முன்னர்  EPRLF அமைப்பின் தலைவர் பத்மநாபா கொலை (1990) செய்யப்படுகிறார். இந்தியாவின் ‘திவீக்’ (1989 ஜூன் 18 இதழ்) பத்திரிகையில் இந்திய படைகள் மேலும் ஒரு வருடத்திற்கு இருப்பது அவசியம் என்று கருத்துத் தெரிவித்த அமிர்தலிங்கத்தின் படுகொலை (1989 ஜூலை 13) இடம்பெறுகிறது. அமிர்தலிங்கம் தமிழ் மக்களை பவுத்திரமாகப் பாதுகாப்பதில் அமைதிப்படைக்கு முக்கிய பங்குண்டு. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகே இந்தியப் படைகள் செல்ல வேண்டும் என்ற கருத்தை இந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

ராஜீவ் கொலைக்கான காரணங்கள் பற்றி பலரும் பல்வேறு அபிப்பிராயங்களை தெரிவித்திருக்கின்றனர். இது பற்றிய புலன்விசாரனையை மேற்கொண்ட டி.ஆர்.கார்த்திகேயன் தனது அறிக்கையில் ரஜீவ்காந்தியை கொலை செய்ததற்கு காரணம் அவர் மீண்டும் பிரதமரானால் தமது தமிழீழ கனவை சிதைப்பார் என்பதை கருத்தில் கொண்டே பிரபாகரன் அவரை கொலை செய்யும் முடிவை எடுத்ததாக குறிப்பிட்டிருக்கிறார். ராஜீவ் படுகொலை ( (Rajeev assassination) ) –பக்கம் -280). இந்த கணிப்பு பெருமளவு சரியானதே. ராஜீவ் காந்தியைப் பொருத்தவரையில் அவரது புதிய அரசியல் பிரவேசத்தின் போது ஏற்பட்ட அவமானகரமான தோல்வியாகவே இதனை பார்த்திருப்பார். எனவே அவர் மீண்டும் பதவிக்கு வருமிடத்து தனது தோல்வியை சரிப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்குவார் என்பது ஊகிக்கக் கூடிய ஒன்றே. எனவே அதனைத் தடுப்பதற்கு புலிகள் மேற்கொண்ட தெரிவுதான் அவரை இல்லாமலாக்குவது. புலிகளின் தந்திரோபாயம் என்பது எப்போதுமே தடையாக இருப்பவர்களை தகர்ப்பதுதான்.
இந்தியாவைப் பொருத்தவரையில் ராஜீவ் கொலை என்பது சாதாரணமான ஒரு விடயமல்ல. இதில் பிறிதொரு நாடு சம்மந்தப்பட்டிருக்குமானால் அது இரு நாடுகளுக்கிடையிலான யுத்தத்தில் முடிந்திருக்கும். ஒரு மிகச் சிறியதொரு அமைப்பு தமது நாட்டுக்குள் ஊடுருவி தமது பெருமதிப்புக்குரிய குடும்ப வாரிசான ராஜீவை படு கொலை செய்திருப்பதானது இந்தியாவைப் பொருத்தவரையில் மிகவும் அவமானகரமானதொரு விடயமாகவே கருதப்பட்டது. ஆனால் மறுபுறம் நமது சூழலில் பெருமிதம் நிறைந்த வெற்றியாகக் கருதப்பட்டது. இதுவே பின்னர் இந்திய எதிர்ப்பரசியாலாக பரிணமித்தது. எனவே இந்திய எதிர்ப்பரசியல் பற்றிப் பேசுவோர் இந்த பின்புலங்களை கருத்தில் கொள்வது அவசியம். இன்னொருவரை குற்றம்சாட்டுவதற்கு முன்னர் நமது பக்கம் குறித்து துல்லியமானதொரு பார்வை நமக்கு அவசியமானதாகும்.

‘In SriLankan cause India has veto power’- இது ராஜதந்திர  வட்டாரங்களுடன் தொடர்புபட்ட நன்பர் ஒருவர் தன்னிடம் அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் இலங்கை தொடர்பாக பேசும்போது இவ்வாறு கூறியதாகச் சொன்னார். இந்தக் கட்டுரையும் இந்த கருத்தையே அடிக்கோடிட முயல்கிறது. ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியா ஒரு நிர்ணயகரமான சக்தி  (Decision Maker)  என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. புலிகள் தலைமையிலான கடந்த முப்பது வருடகால போராட்டத்தில் இந்த கருத்து மிகவும் குறைந்தளவான முக்கியத்துவத்தையே பெற்றிருந்தது. இந்தப் போக்குத்தான் அவர்களை முள்ளிவாய்க்காலில் கொண்டு நிறுத்தியதும். இந்தியா நினைத்திருந்தால் இந்த நிலைமையை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் ஆனால் அவ்வாறு இந்தியா நடந்து கொள்ள வேண்டுமென்ற கடப்பாட்டை வலியுறுத்தக் கூடிய புறச் சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கவில்லை. இந்தியா குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் தெற்கின் முன்னனி அரசியல் சிந்தனையாளரும், போர்க் காலத்தில் சர்வதேசத்தை ஆற்றுப்படுத்தும் நோக்கில் ஜ.நாவிற்கான நிரந்தர பிரதிநிதியாகவும் செயலாற்றிய தயான் ஜெயதிலக இந்தியா, யுத்தத்தின் போது எமக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் எம்மால் யுத்தத்தில் வெற்றிபெற்றிருக்க முடியாது, எப்போதுமே மேற்கை சரிசெய்வதற்கு எமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இந்தியாதான். இந்தியாவை நாம் பகைத்துக் கொண்டால் உலகில் எமக்கு உதவுவதற்கு யாரும் இருக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார். சமீபகாலமாக சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவருவது தொடர்பான உiராயடல்களை கருத்தில் கொண்டே தயான் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் நமது சூழலிலோ இந்தியாவைப் பகைத்துக் கொண்டு நம்மால் வெற்றிபெற முடியுமென்ற கருத்தே மேலோங்கியிருந்தது. இதற்கு பக்கபலமாகவே நமது கருத்துருவாக்க செயற்பாடுகளும் அமைந்திருந்தன.
இந்தியா என்பது ஒரு பிராந்திய சக்தி (Regional Power), இதில் மாறுபட ஏதுமில்லை, எனவே இதனைக் கருத்தில் கொண்டுதான் இந்தியா பற்றிய நமது கருத்துக்கள் அமைய வேண்டும். இந்தியா 1987இல் நேரடியாக தலையிட்ட போதும் சரி தற்போது கொழும்புடனான தனது முலோபாய உறவுகளை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்டும் போதும் சரி தனது நலன்களையே அது பிரதானமாகக் கொண்டிருக்கிறது. இந்தியா மட்டுமல்ல எந்தவொரு பலம்பொருந்திய நாடும் தனது நலன்களைக் கருத்தில் கொண்டே தனது அரசியல், பொருளாதார இராணுவ உறவுகளை பேணிக் கொள்ளும். எனவே இதில் இந்தியாவை மட்டும் தனித்து நோக்க வேண்டிய தேவையில்லை. ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கை என்பதே அதன் நலன் என்ற அச்சாணியில் சுழல்வதுதான்.

இந்தியாவைப் பொருத்தவரையில் தனது பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலான அன்னிய சக்திகள் இலங்கையில் காலூன்றுகின்றன என்ற அச்சத்தின் அடிப்படையிலேயே அன்று கொழும்பிற்கு நெருக்கடியாக இருந்த ஈழத் தமிழர் பிரச்சனையை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றது. ஜெயவர்த்தனே அரசை தமது வழிக்கு கொண்டுவரும் நோக்கிலேயே அப்போதைய ஈழ விடுதலை இயக்கங்களுக்கு பயிற்சியளித்ததும் பின்னர் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக மாகாணசபை முறைமைக்கு அழுத்தம் கொடுத்ததும் என அனைத்துமே இந்தியாவின் பிராந்திய நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டது. இது மிகவும் வெளிப்படையான ஒன்றும் கூட.
இந்தியா தனது நலன்களை நீண்ட கால நோக்கில் பேணிக் கொள்வதற்கானதொரு அமைப்பாக ஆரம்பத்தில் புலிகளையே இனம் கண்டு இருந்தது. இந்தியாவின் பிரபல பத்திரிகையாளரும் இந்திராகாந்தியின் நன்பருமான குல்திப் நாயர், அப்போது இந்தியாவிற்கான இலங்கைத் தூதராக இருந்த ஜே.என்.தீட்சித் புலிகள் மீது பாசம் கொண்டிருந்ததாக குறிப்பிடுகின்றார் ஆனால் அந்த பாசம் இலங்கையில் தமிழர்கள் தமக்கான பங்கை பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற அளவிலானதுதான் என்றும் குறிப்பிடுகின்றார் (ஸ்கூப்! ப-ம் 241). பின்னர் புலிகள் அவ்வாறானதொரு நிலைப்பாட்டிற்கு இணங்கக் கூடியவர்கள் அல்ல என்பதை அறிந்து கொண்டே அடுத்த தெரிவாக  EPRLF    அமைப்பை இந்தியா இனம்கண்டது. இந்தியாவைப் பொருத்தவரையில் அதன் அணுகுமுறை சரி ஏனென்றால் இலங்கையில் சிறுபாண்மை இனமான தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கானதொரு பொறிமுறை தேவை என்பதை இந்தியா ஏற்றுக் கொண்டது அனால் அதற்கு அப்பாலானதொரு ஏற்பாடு தமிழர்களுக்கு தேவையா என்ற கேள்விக்கு இந்தியா செல்ல விரும்பவில்லை. இந்தியா அவ்வாறானதொரு கட்டத்திற்கு சென்றிருக்காது என்று நாம் கூறிவிடவும் முடியாது ஆனால் அதற்கான அவகாசம் இந்தியாவிற்கு நமது தரப்பிலிருந்து வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதே உண்மை.

இந்தியாவிற்கு ஈழத் தமிழர் விடத்தில் பாராமுகமாக இருக்க முடியாது எனவே இதில் மனிதாபிமானத் தலையீடு செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உண்டு என்பதையும் புலிகளின் தத்துவ ஆசிரியர் பாலசிங்கமும் ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் தனது ‘போரும் சமாதானமும்’ என்னும் நூலில் இவ்வாறு கூறிச் செல்கிறார்.
“அரசியல் மட்டத்திற் பார்க்கப் போனால் பாதுகாப்பற்ற அப்பாவித் தமிழ்ச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்பு வன்முறையைத் தடைசெய்யும் நோக்குடன் மெற்கொள்ளப்பட்ட மனிதாபிமானத் தலையீடாக இது அமைந்தது. இராணுவ மட்டத்தில் நோக்குமிடத்து சிங்கள அரசுக்கு எதிராக தமிழரின் ஆயுதப் போராட்ட இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு இரகசியமாக உதவி புரிந்தமையும் இந்திய தலையீட்டின் ஓர் அம்சமாக அமைந்தது. தமிழரின் தேசிய இனப்பிரச்சனைக்குச் சமாதானப் பேச்சுக்கள் வாயிலாகத் தீர்வுக்கான வழிவகை செய்யுமாறு ஜெயவர்த்தனா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்குடனேயே, தமிழ் போராளி அமைப்புக்களுக்கு இந்திய அரசு பயிற்சிகளையும் ஆயுதங்களையும் வழங்கியது. புவியியல் – கேந்திர மட்டத்திற் பார்த்தால், இந்தியத் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அந்நிய நாசகாரச் சக்திகள் அவ்வேளை இலங்கையில் ஊடுருவி நிற்பதாக இந்திய அரசு அஞ்சியது. இந்தியாவின் புவியியற் – கேந்திர உறுதிநிலைக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய இந்த அந்நியச் சக்திகளை இலங்கையிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்பதும் இந்தியத் தலையீட்டின் நோக்கமாக இருந்தது. இவ்வாறு கூறும் பாலசிங்கம், தொடர்ந்து பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாகப் பெரிய எடுப்பில் மேற்கொள்ளப்பட்ட இத்தலையீடானது இறுதியில் இந்திய வெளிவிவகாரக் கொள்கைக்கும் இராஜதந்திர முயற்சிக்கும் ஏற்பட்ட பெரியதொரு தோல்வியாக முடிந்தது. இந்திய இலங்கை உடன்பாடும் சரி இந்திய அமைதிப்படைகளின் செயற்பாடும் சரி, தமிழரின் இனப்பிரச்சனையை தீர்த்து வைக்கவில்லை. வௌ;வேறு காரணங்களின் நிமித்தம். இந்திய – இலங்கை உடன்பாட்டையும் தமிழர் தாயகத்தில் இந்திய படைகளின் இருத்தலையும் தமிழரும் சிங்களவரும் விரும்பவில்லை என்றும் கூறுகிறார்.” (ப.ம் 81-82).

இங்கு திரு.பாலசிங்கம் இந்திய தலையீடானது, இந்திய வெளிவிவகாரக் கொள்கைக்கும் இராஜதந்திர முயற்சிக்கும் ஏற்பட்ட பெரியதொரு தோல்வியாக முடிந்தது, என்று கூறும் போது அந்த தோல்வியில் நமது தரப்பு பங்கு குறித்து கசிசனை கொள்ளவில்லை. ஒரு வேளை அவர் புலிகளின் தலைமையை திருப்திப்படுத்தும் நோக்கிலும் இதனைக் குறிப்பிட்டிருக்கலாம். ஏனெனில் புலிகளின் தலைமையையின் தவறுகளை விமர்சிக்குமளவிற்கு அவரால் செல்ல முடியாது. உண்மையில் இங்கு மக்கள் இந்திய படைகளின் இருப்பை விரும்பவில்லை என்பதல்ல விடயம் புலிகள் விரும்பவில்லை என்பதுதான் உண்மை. நான் மேலே குறிப்பிட்டது போன்று இந்திய படைகள் தொடர்ந்து இருந்திருக்குமிடத்து அன்றே புலிகளின் கதை முடிவுக்கு வந்திருக்கும். இதனை கருத்தில் கொண்டே புலிகள் பிரேமதாசவுடன் இணைந்து இந்திய ராஜதந்திரத்தை தோல்வியுறச் செய்தனர். புலிகளால் நேரடியாக இந்திய அரசின் அணுகுமுறையை தோற்கடிக்க முடியாது என்பதை விளங்கிக் கொண்டே பிரேமதாசவின் கரங்களை பற்றினர். இந்தியாவின் நலன்களையும் அதன் எல்லையையும் விளங்கிக் கொண்டு புலிகள் தூர நோக்கில் செயலாற்றியிருந்தால் விடயங்கள் வேறு விதமாகவும் அமைந்திருக்கலாம். உண்மையில் இந்திய படைகளின் வெளியேற்றத்தால் வெற்றிபெற்றது பிரேமதாசவும் சிங்களத் தேசியவாதிகளுமே அன்றி புலிகளோ தமிழ் மக்களோ அல்ல என்பதே உண்மை. 87இன் கசப்பான அனுபவங்களுக்கு பின்னர் பெருமளவு இலங்கை விடயத்தில் ஒதுங்கியிருப்பதான தோற்றப்பாட்டையே இந்தியா காட்டி வந்தது ஆனால் இறுதி யுத்தத்தின் போது அது நடந்து கொண்ட முறையிலிருந்து இந்தியா அவ்வாறு ஒதுங்கியிருந்ததா அல்லது பொருத்தமானதொரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்ததா என்ற கேள்வியே எழுகிறது. தயான் சொல்லுவது போன்று இறுதி யுத்தத்தின் போது இந்தியா கொழும்பிற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால் நிட்சயமாக கொழும்பால் யுத்த வெற்றிவிழா கொண்டாட முடியாமல் போயிருப்பது திண்ணம். இந்தியா தீர்மானித்திருந்தால் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களை காரணம் காட்டி ஒரு தலையீட்டைச் செய்திருக்க முடியும். 87இல் நேரடித் தலையீடு செய்தபோதும் ஆறுகோடித் தமிழர்களை உட்கொண்டிருக்கும் இந்தியாவால் ஈழத் தமிழர்கள் குறித்து கரிசனை கொள்ளாது இருக்க முடியாது என்ற வாதத்தையே தனது நலன்சார் அரசியல் தலையீட்டுக்கான நியாயமாகக் சுட்டிக்காட்டியது இந்தியா. 83இல் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு வன்முறைகளை கண்டிக்கும் நோக்கில் அப்போதைய இந்திராகாந்தியின் வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையிலும் மேற்படி வாதமே இலங்கையை எச்சரிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டது. ‘தனது கொல்லைப்புறத்தில் இத்தகைய கொடுமைகள் நீடித்தால் இந்தியாவால் சும்மா பார்த்துக் கொண்டு இருக்க முடியாது’ 83 வன்முறைகள் தொடர்பாக, தனது அதிருப்திகளை தெலைபேசியில் வெளிப்படுத்திய இந்திராகாந்தி பின்னர் வழங்கிய வேண்டு கோளுக்கு இணங்கவே அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. (போரும் சமாதானமும் – ப.ம்-92)

இந்தியா பற்றி நமது சூழலில் முன்வைக்கப்பட்ட அனைத்து கணிப்புகளும் பிழைத்திருப்பதே யதார்த்தம். நம்மில் ஒரு சாரார் குறிப்பிட்டனர் புலிகள் முழுமையாக அழிந்து போவதை இந்தியா விரும்பாது, ஏனென்றால் அதற்கான பிடிமானம் இல்லாமல் போய்விடும் எனவே ஏதொவொரு வகையில் புலிகளை ஒரு மட்டுப்பட்ட அளவில் பாதுகாக்கவே அது முயலும் என்றே அவ்வாறானவர்கள் கணித்தனர். சிலவேளை இவ்வாறானதொரு கணிப்பு புலிகளிடமும் இருந்திருக்கலாம். புலிகளின் தலைவர் தனது இறுதி மாவீரர் தின உரையில் இந்தியாவை நோக்கி நேசக்கரம் நீட்டியதுடன் வழமைக்கு மாறாக புன்னகையுடனான தனது தோற்றங்களையும் வெளிப்படுத்தியிருந்தார். பிறிதொரு சாரார், சிங்களத் தேசியவாத பின்புலம் கொண்ட மகிந்தவை முழுமையாக இந்தியா நம்பாது எனவே புலிகள் குறித்து இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு இருந்தாலும் மேற்படி பின்புலத்தை கருத்தில் கொண்டே இந்தியா செயலாற்றும் என்றனர். ஆனால் இறுதியில் எதுவுமே நிகழவில்லை. இந்தியாவை சாட்சியாகக் கொண்டே கொழும்பு புலிகளை அழிக்கும் யுத்தத்தில் முழுமையாக வெற்றி பெற்றது. புலிகளின் முப்பதுவருட கால அரசியல் சகாப்தம் அதிர்ச்சியளிக்கும் வகையில் முடிவுக்கு வந்தது. இப்போது புலிகளின் அரசியல் அற்றவொரு சூழல். இலங்கையின் அரசியல் சீன-இந்திய போட்டிக் களமாக மாறியிருக்கிறது. நமது சூழலில் பழைய மாவோவாத சிந்தனைகளில் அனுதாபம் உள்ள சிலர் என்னதான் சீனப் பூச்சாண்டி என்றெல்லாம் தமது மன ஆறுதலுக்காக பேசினாலும், முன்னர் எப்போதுமில்லாதவாறு சீனா கொழும்புடன் தனது முலோபாய உறவுகளை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றது என்பதே உண்மை. இந்த மூலோபாய போட்டியின் மிகத் துல்லியமான பிரதிபலிப்பே இதுவரை இலங்கைக்கான பிரதான வழங்குனராக இருந்த யப்பானின் இடத்தை சீனா எடுத்துக் கொண்டுள்ளது. சீனா தனது உதவிகள் வெறுமனே பொருளாதார ரீதியானது என்று சொல்லிக் கொண்டாலும் இலங்கைக்கு பல்லாயிரம் கோடிகளை நோக்கமற்று செலவளிப்பதற்கு சீனா ஒன்றும் முட்டாள்தனமான நாடல்ல.

இலங்கையில் சீன-இந்திய முலோபாய போட்டிக்களம் ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது என்பது துலாம்பரமானதாகும். கொழும்மைப் பொருத்தவரையில் சீன-இந்திய நகர்வுகளில் இருவரையும் சம அளவில் நடத்துதல் என்னும் அனுகுமுறை ஒன்றையே அது பின்பற்றி வருகிறது. இதன் துல்லியமான வெளிப்பாடுதான், சமீபத்தில் இலங்கையின் சனாதிபதி புதுடில்லியில் இந்தியப் பிரதமருடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்த வேளையில் இலங்கையின் பிரதமர் கொழும்பில் சீனத் துனை சனாபதியுடன் புதிய உடன்பாடுகளில் கையெழுத்துதிட்டுக் கொண்டிருந்தார். இது மறைபொருளாக வெளிப்படுத்தும் செய்தி இந்த பிராந்தியத்தில் இந்தியாவிற்கு சமதையான முக்கியத்துவத்தை சீனாவும் பெறுகிறது என்பதுதான். இது பிறிதொரு வகையில் இந்தியாவிற்கு மறைமுகமாக விடுக்கப்படும் எச்சரிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம். இந்தியா எங்களுடன் இல்லாவிட்டால் சினா எங்களுடன் இருக்கும். ஆனால் இதனை நீண்டகாலத்திற்கு தொடர முடியாதென்றே ஆய்வாளர்கள் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர். சிங்கள தேசியவாதிகளைப் பொருத்தவரையில் அடிப்படையிலேயே இந்திய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்கள், இதனை புது டில்லியும் நன்கு அறியும்.
இந்த இடத்தில்தான் முக்கியமான கேள்வி எழுகிறது, இன்றைய சூழலில் இந்தியா குறித்து நமது உரைகல் என்ன? இங்கு இரண்டு தெரிவுகள்தான் இருக்கின்றன. ஒன்று இந்தியா நமது நட்பு நாடு என்ற அடிப்படையில் நமது நலன்களை கருத்தில் கொண்டு இந்திய நலன்களுக்கு உதவியாக செயலாற்றுதல். இதனை வெளிவிவகார அர்த்தத்தில் நலன்கள் சந்தித்துக் கொள்ளும் புள்ளி என்பர்  (Convergence of interest).   இல்லாவிட்டால் இரண்டாவது தெரிவு பழைய புலிப்பாணியிலான இந்திய எதிர்பரசியல் மாயையில் தொடர்ந்தும் நீடித்தல். இந்த கட்டுரை முதலாவது தெரிவையே புத்திசாலித்தனமானதும் காலப் பொருத்தமானதென்றும் முன்மொழிகிறது. இரண்டாவது தெரிவு அடிப்படையிலேயே உணர்ச்சிவசமானதும் யதார்த்தங்களைக் கருத்தில் கொள்ளாததுமான முடிவாகும். உணர்ச்சிவசமான எந்தவொரு முடிவும் ஈழத் தமிழ் மக்களுக்கு விமோசனமளிக்கக் கூடியது அல்ல என்பதையே இந்த கட்டுரை சுட்டிக்காட்ட முயல்கிறது.

தெற்காசியாவில் இந்தியாவிற்கு சண்டித்தனம் காட்டிக் கொண்டு ஈழத் தமிழர் நலன்களைப் பேணிக் கொள்ள முடியும் என்று ஒருவர் எண்ணுவாராயின் அவர் அரசியல்ரீதியாக மிகவும் அப்பாவித்தனமான ஒருவராகவே இருக்க முடியும். இப்படியொரு அப்பாவித்தனம்தான் முன்னர் புலிகளின் தலைமையிடமும் அதன் வழி இயங்கிய புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் இருந்தது. இந்தப் புரிதல் இந்தியாவை மேலும் நம்மிலிருந்து அன்னியப்படுத்த பயன்பட்டதே ஒழிய இந்தியாவை எம்மை நோக்கி வர வழிவகுக்கவில்லை. இந்தியா குறித்து ஈழ புரட்சிகர விடுதலை முன்னனியின்   (EPRLF)  தலைவராக இருந்த பத்மநாபா இவ்வாறு கூறியதாக ஒரு தவலுண்டு. அவர் கூறினாரா இல்லையா என்பது சரியாகத் தெரியாவிட்டாலும் கருத்து சரியானது என்ற வகையிலேயே இங்கு எடுத்தாளப்படுகின்றது. ‘இந்தியா என்பது ஒரு கருங்கற்பாறை அதில் நமது தலையை முட்டினால் நமது தலைதான் உடையும்’ நமது தலையும் அப்படித்தான் உடைந்தது. ஆனால் சில விடங்களைச் சொல்லும் போது அதன் உட்கிடக்கை காலம் கடந்தே நமக்கு உறைக்கிறது. ஏனென்றால் நமது தமிழ் மனோபாவம் அப்படிப்பட்டது. சொல்லுபவர் யார் என்பதை பார்க்கிறோமே தவிர சொல்லப்படும் விடயம் என்ன என்பதை நாம் பார்ப்பதில்லை. ஆனால் ஒரு முன்னேறிய சமூகம் எப்போதுமே சொல்லப்படும் விடயத்திலேயே கவனம் கொள்ளும்.

87இல் இந்தியா நேரடியாக தலையிட்ட காலத்திலும், இந்தியாவின் இராஜதந்திரத் தோல்விக்கு சிங்கள ஆட்சியாளர்களும் காரணமாக இருந்த போதும், இந்தியா புலிகளையே தமது தோல்விக்கான பிரதான காரணமாகக் கருதியது. இங்கு சிங்களம் என்பது ஒரு அங்கிகரிக்கப்பட்ட அரசு என்பதையும் புலிகள் என்பது ஒரு அமைப்பு என்பதையும் கருத்தில் கொண்டே இந்தியாவின் அணுகுமுறையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அங்கிகரிக்கப்பட்ட ஒரு அரசுடன்  (recognized state) ) பிறிதொரு அரசு ஒரு எல்லைக்கு மேல் தேவையற்று பகைத்துக் கொள்ள விரும்பாது. ஏனெனில் இங்கும் பிரதானமாக இருப்பது அந்த அரசின் நலன்கள்தான். ஆனால் ஒரு பிராந்திய சக்தி அல்லது வல்லரசு எப்போது ஒரு குறிப்பிட்ட அரசின் மீது தனது அழுத்தங்களை பிரயோகிக்கும் என்றால் தனது நலன்களை அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு வெளியிலும் பேணிக் கொள்ளக் கூடிய சூழல் இருக்கும் போதுதான். இந்தியா அன்று தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு பயிற்சியளித்த போது இவ்வாறானதொரு சூழல்தான் இருந்தது. ஆனால் அந்த சந்தர்ப்பம் தமிழர் தரப்பால் சரியாக கையாளப்படாததால் அல்லது நமக்கு சரியாகக் கைக்கொள்ளத் தெரியாததால், இந்தியா ஈழத் தமிழர் அரசியலில் இருந்து புறம்தள்ளப்பட்டது. இதன் காரணமாக கடந்த முப்பதுவருட கால ஈழத் தமிழர் அரசியலிலிருந்து இந்தியா அன்னியப்பட்டே இருந்தது. ஆனால் மீண்டும் இந்தியா தனது முலோபாய நகர்வுகளில் தீவிரம் காட்டி வரும் சூழலில் இந்த சந்தர்ப்பம் குறித்து நமது சூழலில் ஆரோக்கியமான நிலைப்பாடு இருப்பது அவசியம்.

இதில் முரண்நகையான விடயம் 80களுக்கு பிற்பட்ட காலத்தில் இந்தியா தனது பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலான சக்திகள் இலங்கையில் தலையீடு செய்கின்றன என்று குறிப்பிட்டதற்கும் இன்றைய நிலைமைக்கும் அடிப்படையிலேயே வேறுபாடுண்டு. அன்று இந்தியா குறிப்பிட்டது அமெரிக்காவையே ஆனால் இன்று அந்த இடத்தில் சினா இருக்கிறது. அன்று அன்னிய சக்தியாகக் கருதப்பட்ட அமெரிக்கா இந்தியாவின் இன்றைய மூலோபாயப் பங்காளியாக   (Strategic partner)இருக்கின்றது. எனவே இதனைக் கருத்தில் கொண்டுதான் ஈழத் தமிழர் அரசியலில் இந்தியாவின் வகிபங்கு குறித்து சிந்திக்க வேண்டும். எனவே இங்கு அடிப்படையிலேயே இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு என்பது ஈழத் தமிழர் நலன்களுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பங்காற்றும் பொறுப்பு ஈழத் தமிழர் அரசியல் சக்திகளையும் சாருகிறது. தெற்காசியாவிலும் சரி உலகளவிலும் சரி உரிமையுடன் ஈழத் தமிழர் விவகாரம் பற்றி பேசுவதற்கான ஒரேயொரு நாடு இந்தியா மட்டுமே. இந்தியா ஈழத் தமிழரைக் கைவிட்டால் நமக்கு உதவுவதற்கு வேறு யாரும் இருக்கப் போவதில்லை. இதனைக் கருத்தில் கொள்ளாத எந்தவொரு வாதமும், செயற்பாடும் ஈழத் தமிழ் மக்களை மேலும் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்லவே வழிவகுக்கும். இது குறித்து ஆரோக்கியமான விவாதங்களை இந்த கட்டுரை எதிர்பார்க்கிறது.