விடுதலை போராட்டங்கள் எல்லாம்…
விடுதலைப் போராட்டங்களை அமைதி வழியிலே நடத்தி விடுதலை அடைந்துவிடலாம் என்று நீங்கள் அறிவுரை வழங்கினால் உங்களையும் உங்களின் நோக்கத்தையும் விமர்சனம் செய்யும் அனைத்து உரிமையும் உங்களால் தீவிரவாதிகள் என்று தூற்றப்படுபவர்களுக்கு நிச்சயம் உண்டு.
அவர்கள் நிலத்தில் அவர்கள் மொழியுரிமையை இழந்துச் சொந்தப் பந்தங்களை இழந்து அடிமையாய் வாழச் சொல்ல நமக்கு ஏதேனும் உரிமை இருக்கிறதா?
ஏகாதிபத்தியங்களின் பூளோக அரசியலில் நிலத்தின் அடியில் இருக்கும் வளங்களுக்கு இருக்கும் மரியாதை நிலத்தைத் தாயாகப் போற்றும் மனிதர்களுக்கு இருக்கிறதா என்ன?

தமிழீழத்தில் புலிகள் போல் வேறு ஏதேனும் இயக்கம் உருவாகி இன்று போல் அதன் போராட்டத்தில் ஆயுதங்கள் அமைதியாக்கப் பட்டிருந்தால் சுதந்திரத் தாகம் கானல் நீராய்ப் போய் இருக்கும். ஆனால் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்பது போய்த் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று போராட்டத்தின் வடிவம் மாறி ஏகாதிபத்தியங்கள் விழிப் பிதுங்கம் அளவிற்குச் சனநாயகத்தின் சட்டையைப் பிடித்து அனைத்துத் தமிழர்களும் கேள்விகேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். வருடத்திற்கு வருடம் பெருகிக் கொண்டிருக்கும் தமிழர்களின் சமூக ஊடகப் பதிவுகளே அதற்கு அத்தாட்சி.

புலிகள் முதலில் சிங்களத்திற்குத் துதிபாடும் உள்ளூர்க் காவல்துறையை எதிர்த்தனர் பின்புச் சிங்கள ராணுவத்தை எதிர்த்தனர், அத்தோடு நின்றுவிடவில்லை உலகின் மூன்றாவது பெரிய ராணுவம் என்று மார்தட்டிக் கொள்ளும் இந்திய ராணுவத்தையும் எதிர்த்தனர், அதுமட்டுமாக் கூட்டமாய்ச் சேர்ந்த பல உலக நாடுகளின் கூட்டணியையும் எதிர்த்தனர். அந்த அதர்மக் கூட்டணி வீரத்தால் மட்டும் பேசியிருந்தால் அவர்களின் பதில் வேறு மாதிரி இருந்திருக்கும் ஆனால்அவர்கள் பேசியது துரோகம் எனும் பண்பற்ற, அறமற்ற மொழியில் தான், அறத்தைப் போற்றிய அவர்கள் ஒரு நாளும் அஞ்சவில்லை அவர்களின் நீட்சி உண்மைத் தமிழன் உள்ளங்களில் அணையாத சுதந்திரத் தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இவர்களாத் தீவிரவாதிகள் உலகமே, பதில் சொல்!!! அமைதியாய்ச் சுதந்திரம் வாங்கிய நாடுகளும், ஆயுதத்தால் சுதந்திரத்தைச் சுவைத்துக் கொண்டிருக்கும் நாடுகளும் பதில் சொல்லவேண்டும்.